இலங்கையில் மதங்களுக்கிடையிலான செயற்திறன் மிக்க இணக்கப்பாட்டிற்காக சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் - 2021.03.10

சமூக முறண்பாடுகள் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் மக்களுக்கு இடையேயான புரிந்துணர்வின்மையே காரணமாகும். புரிந்துணர்வொன்று ஏற்படுத்தப்படுமிடத்து பிரச்சினைகளற்ற சமுதாயத்தினை நாம் உருவாக்க முடியும். மதங்கள், இனங்களுக்கிடையேயான ஒரு நல்லிணக்க தொடர்பொன்று இருக்குமேயானால் நாட்டில் கலவரங்கள், முறண்பாடுகள் ஏற்படாமல் ஒற்றுமையான ஒரு வாழ்வை மக்கள் வாழ்ந்திட முடியும்.
சமூகங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வையும் சமூக மக்களுக்கிடையேயான ஒரு நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த கிராமங்கள் தோறும் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ள பல சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. ஒற்றுமையான சமூகமொன்று உருவாக வேண்டும் எனவும் இன,மத பேதமின்றி மனிதனை மனிதன் மனிதாபிமான முறையில் மதித்து செயற்பட வேண்டும் என்பதனை மையப்படுத்தியதான செயற்பாடுகளை அச் சங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில் கிராமங்களிலே செயற்பட்டு வருகின்ற சகவாழ்வு சங்கங்களின் செயற்பாடும் முக்கியமானதொன்றாக அமைகின்றது. சகவாழ்வு சங்கங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் இலங்கையில் மதங்களுக்கிடையிலான செயற்திறன் மிக்க இணக்கப்பாட்டிற்காக சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(2021.03.10) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், ACTED நிறுவனத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சகவாழ்வு சங்க உறுப்பினர்களும் பங்குபற்றினர்.

ACTED நிறுவனத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் விரிவுரைகளோடு சகவாழ்வு சங்கங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டம் பற்றியதான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் வலுப்படுத்தப்படும்போது மதங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டினை இலகுவில் அடைந்துகொள்ள முடியும். அந்த வகையில் ஒற்றுமையையும் இணக்கப்பாட்டினையும் வலுப்படுத்தும் நோக்கில் சகவாழ்வு சங்கங்கள் செயற்பட வேண்டியது அவசியமாகும்.





