திரைவித்யா “ கல்வித்திட்டத்தின் மூலம் Smart TV களினை வழங்கிவைக்கும் நிகழ்வு – 2021.01.13
வளர்ந்துவரும் நவீன காலத்திற்கு ஏற்றாற்போன்று கற்றல் செயற்படுகள் செயற்படுத்தப்பட்டு வருவதினை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தடைபட்டதொன்றாகவே காணப்படுகின்றது. கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குரிய களமொன்று COVID 19 நோய்த் தொற்று காரணமாக இல்லாமல் ஆக்கப்பட்டதெனலாம்.
கடந்த காலங்களில் மாணவர்கள் பாடசாலைகளில் கற்பதோடு பிரத்தியோக வகுப்புகளுக்கும் சென்று தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து எதிர்காலத்துக்கு ஏற்றதான பயணத்தை தொடர்ந்திருந்தனர் எனினும் அவை தற்கல சூழ்நிலையில் தொடரமுடியாத பயணமாகவுள்ளது.
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்படுகளை இலகுவாக்குவதற்கும் அவர்களது அறிவு, திறன், மனப்பாங்குகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடனும் மேலதிக வகுப்புகளுக்கு செல்லாத மாணவர்களின் கல்வி தரத்தினை மேலோங்க வைக்கும் முயற்சியுடனும் பாடசாலைகளிலே தொலைக்காட்சி கல்வியினை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தொலைக்காட்சி கல்வியினூடே மாணவர்கள் மேலதிக வகுப்புக்களின் மூலமாக பெறக்கூடிய கற்றலினை ஈடு செய்ய பிரபல்யமான பாடசாலைகளில் இடம்பெறும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை Online System மூலம் வழங்கும் நோக்குடன் பட்டிருப்பு கல்வி வலயத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 17 பாடசாலைகளுக்கு “ திரைவித்யா “ கல்வித்திட்டத்தின் மூலம் Smart TV களினை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (2021.01.13) பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இன்று எமது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ந.தனஞ்சயன், காரைதீவு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்தீபன் மற்றும் பட்டிருப்பு வலய உதவிக் கல்வி பணிப்பாளர், எமது பிரதேச செயலக கிராக அபிவிருத்தி உத்தியோகத்தர், அதிபர்கள், மாதர்/கிராம அபிவிருத்தி சங்கத்தினர், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கற்பித்தல் செயற்பாடுகளானவை எவ்வாறு செயற்படுத்தப்படல் வேண்டும் மற்றும் இச் செயற்பாடுகளினூடே மாணவர்கள் பெறும் பயன்கள் தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. உரிய வகையில் உபகரணங்களை கையாண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையிலே பயன்படுத்துவதே இத்திட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் செயற்பாடாக அமையும் என்பதினால் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் பாடசாலைகளின் செயற்பாடுகள் அமையப்பெறல் வேண்டும்.
மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகள் மீது அதிக ஈடுபாட்டினை ஏற்படுத்த முயலும் இத் தொலைக்காட்சி முறையூடான கற்பித்தல் முறையானது முறையான ஒழுங்கில் கற்பிக்கப்படும்போது “ திரைவித்யா “ கல்வி திட்டத்தின் வெற்றி நாட்டின் கற்பித்தல் செயற்பாட்டிலே புதியதொரு மாற்றத்தை கொண்டுவருமெனலாம்.