இயற்கை அனர்த்தங்களுக்கெல்லாம் காரணம் மனிதர்களால் இயற்கைச் சமநிலையைக் குழப்புகின்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்தான் பேரழிவுக்குக் காரணமாய் அமைகின்றன எனவே நாம் அனைவரும் இயற்கையைப் பாதுகாக்கின்ற கடப்பாட்டில் இருக்கின்றோம். மரங்களை வளர்ப்பது, காடுகளை அழிக்காது பாதுகாப்பது, உட்கட்டுமானங்களை இயற்கைக்கு ஏற்றவகையில் அமைப்பது, பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது போன்றவற்றில் அதிகூடிய அக்கறை செலுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றன. என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் 26.12.2018 புதன்கிழமை காலை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் இயற்கை அனர்த்தங்களால் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படுகின்ற இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவையாகும். இவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டி முன்கூட்டியே அவர்களுக்கான உபாயங்களை வழங்கி பாதுகாப்பு வழங்குவது பிரதேச செயலகத்தின் ஒவ்வோரு உத்தியோகத்தர்களதும் சமுதாயம் சார் கடப்பாடாகும்.
பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும், பிரதானமாக கிராமசேவை உத்தியோகத்தர்கள் கிராமங்களிலே ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பது , முகங்கொடுப்பது போன்ற விடயங்களுக்கு மிகவும் காத்திரமானவர்களாக இருக்கின்றார்கள். இவற்றுக்கு மேலாக அனர்த்தம் என்று வரும்போதுஅனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றினைந்து பிரதேச மக்களை பாதுகாத்து காப்பாற்ற வேண்டியது எமது கடப்பாடாகும் என அவர் இதன்போது தெரிவித்தார். இந் நிகழ்வின் போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் நீத்த அனைவருக்குமான ஆத்ம சாந்தி வேண்டி இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரதேச செயலகத்தில் கடமைபுரிகின்ற அனைத்து அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.





