மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா – 2021.02.02

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது
இவ்வாறான பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் முகமாக எமது பிரதேச செயலகம் வருடா வருடம் ஒரு நன் நாளன்று ஒரு சிறப்பானதொரு கொண்டாட்ட விழாவாக கொண்டாடுவது வழக்கமாகும். COVID 19 காலகட்டமான இக் காலகட்டத்தில் வருடா வருடமாக நடாத்தப்படுகின்ற இப் பொங்கல் கொண்டாட்ட விழாவானது நடாத்துவதற்கு ஏற்றதான சூழ் நிலை அமையப் பெறவில்லை. எனினும் உழவர்களையும் அவர்கள் கொண்டாடும் இத் திருநாளை மதிக்கும் முகமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று(2021.02.02) எமது பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியதான ஒரு பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. பாரம் பரியமாக உழவர்களால் கொண்டாடப்படும் இந் நிகழ்வினை அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதோடு உழவர்களை நாம் மதிக்க வேண்டும் என்பதினை அனைவரையும் உணரவைக்கும் நோக்கில் இவ் விழாவானது கொண்டாடப்பட்டு வருகின்றது.






இப் பொங்கல் விழா கொண்டாட்ட நன் நாளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமானது கல்விக்கு ஒளியூட்டும் வகையில் 2021 தை மாதம் தொடக்கம் சமூக நலன் விரும்பிகளின் அனுசரனையுடன் 'ஒளி பெற்று ஒளிர்வாய்' எனும் கல்வி மேம்பாட்டினை வலுப்படுத்தும் ஒரு திட்டத்தினை அமுல்படுத்தியது. முதற் கட்டமாக இத் திட்டத்திலே தெரிவு செய்யப்பட்ட 07 மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.







எமது மாணவர்களின் கல்வி மேம்பட வேண்டும் என்றும் குறித்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை முடியும் வரை அவர்கள் கல்வியை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனும் நோக்கினை மையப்படுத்தி மாதாந்தம் அவர்களது கற்றல் நடவடிக்கைகளுக்காக உதவித் தொகையொன்றை வழங்கும் திட்டமாக இத்திட்டம் அமைகின்றது.
இத் திட்டத்திற்கு அனுசரணை வழங்கிய தம்மை அடையாளப்படுத்தாத அனுசரணையாளர்கள் பாராட்டப்பட்டதோடு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் இத் திட்டங்களை வரவேற்கும் நலன் விரும்பிகள் வரவேற்கப் படுவதாகவும் இப் பிரதேச செயலகம் சார்பாக பிரதேச செயலாளர் கருத்துமொழிவினை முன்வைத்தார்.



பட்டதாரிப் பயிலுனர்களுக்கு பயிலுனர் நியமனம் வழங்கும் நிகழ்வு – 2021.02.01

4ம் கட்டமாக இணைக்கப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்கள் பட்டியலிலிருந்து விடுபட்ட பட்டதாரிப் பயிலுனர்களின் மேன் முறையீடுகளை கருத்தில் கொண்டு அரச சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று(2021.02.01) எமது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.த.நிர்மலராஜ், நிருவாக உத்தியோகத்தர் திரு.வே.தவேந்திரன் மற்றும் பொறுப்பான உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பட்டதாரிகளாக இருந்து அரச சேவைக்குள் உள் நுழையும் பட்டதாரிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதோடு அரச சேவைக்குள் உள் வாங்கப்படும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும், வினைத்திறனான செயற்பாடுகள் எவ்வாறு அமையப்படல் வேண்டும் போன்றதான விளக்கங்கள் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு வழங்கப்பட்டது.
அரச நிர்வாக முறைக்குள் உள்வாங்கப்படும் பட்டதாரிகள் திறம்பட்ட வினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதோடு பட்டதாரிப் பயிலுனர்களாக தாங்கள் இணைக்கப்படும் காலகட்டத்தில் சிறந்தளவான பயிற்சிகளை பெற்று வினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கவேண்டும் என பயிலுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
திணைக்களங்களின் சேவைகள் மக்களுக்கு பூரணத்துவமாக கிடைக்கப் பெறல் வேண்டும் அவ்வாறான சேவைகளை வழங்கும் அரச ஊழியர்களாகிய நாம் மக்களுக்கான சேவையினை மையப்படுத்தியதான வேலைகளை செய்ய வேண்டும் என்பதோடு ஒருஉயரிய சேவையினை மக்களுக்கு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு அரச ஊழியர்களும் தங்களுக்கான பொறுப்புக்களை தாங்கள் செவ்வனே நிறைவேற்றுவார்களேயானால் பொது மக்களுக்கான சேவையில் எந்த குறைபாடுகளும் ஏற்படாது எனவே பட்டதாரிப் பயிலுனர்களாக அரச கடமையினை பொறுப்பேற்கும் பட்டதாரிகள் சிறப்பானதொரு சேவையினை மக்களுக்கு வழங்குவார்கள் என தாம் நம்புவதாக பிரதேச செயலாளர் தமது கருத்தினை முன்வைத்திருந்தார்.











COVID 19 மற்றும் டெங்கு தொற்றுக்களை தடுக்கும் முகமான கலந்துரையாடல் - 2021.01.27

நோய்த் தொற்றுக்களிலிருந்து எம்மையும் எமது சமூக மக்களினை பாதுகாக்க வேண்டிய தேவையினையும் அந் நோய்த் தொற்றுக்கள் எமது சமூகத்திற்குள் ஊடுருகுவதை தடுக்கும் நோக்கினையும் மையமாக கொண்டதான COVID 19, டெங்கு நோய் தொற்று தொடர்பான ஒரு விசேட கலந்துரையாடல் இன்று (2021.01.27) எமது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், உதவி சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் போன்றோர் பங்குபற்றியிருந்தனர்.


தற்போது எமது பிரதேச செயலகப் பிரிவில் COVID 19, டெங்கு நோய்த் தொற்றுக்களின் தாக்கம் எவ்வாறு காணப்படுகின்றது, தொற்றாளர்களின் விபரங்கள், பகுதிகள் என்பவற்றின் அடையாளங்கள் பற்றியதான வினாவல்கள் இடம்பெற்றது. இதன்போது,
சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகரினால் பிரதேச செயலக பிரிவுக்குரிய COVID 19 தொற்று தொடர்பாக தொற்றாளர்களின் விபரங்கள், பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நோயாளர்களின் விபரங்கள் மற்றும் தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களின் விபரங்கள் உட்பட ஏனைய பல விடயங்கள் பகிரப்பட்டன.


அந்த வகையில் கடந்த காலங்களில் 635 நபர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிலே 10 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதாகவும் 297 Antigen பரிசோதனைகள் மேற்கொண்டதில் 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு நேற்று (2021.01.26) 48 புதிய தொற்றாளர்கள் எமது பிரதேச செயலக பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
COVID 19 தொற்று எந்த வகையிலும் பரவலான தொற்றாக பொதுமக்களிடையே பரவக்கூடாது என்பதினை மையப்படுத்தியதாக அமையும் வகையில் சில தீர்மானங்கள் இக் கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்டன. அந்த வகையில்
- பாடசாலை மட்டங்களிலே சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறைவாக காணப்படுவது அவதானிக்கப்பட்டமையினால் சுகாதார நடைமுறையினை இறுக்கமாக பின்பற்ற வைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்ற தீர்மானம் எட்டப்பட்டது. அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் மற்றும் உரிய வகையிலாக சமூக இடைவெளியினை பேணுதல் போன்ற விடயங்கள் பின்பற்றப்படல் வேண்டும் என்பதோடு அவற்றினை கண்காணிப்பதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
- பொதுச் சந்தை தொடர்பான கருத்து முன்வைத்தலின்போது பொதுச் சந்தையினை சந்தை தொகுதிகளில் நடத்த முனைவது இக் கால கட்டத்தில் பொருந்தாத ஒன்றாக காணப்படுவதினால் சமூக இடை வெளியுடன் பொதுவான பரந்த இடத்;திலையே சந்தை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
- வர்த்தக நிலையங்களிலே வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது சுகாதார பொறிமுறைகள் பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டதினால் சமூக இடைவெளியுடன் கூடிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தக நிலையங்கள் அவதானிக்கப்படுமிடத்து உடனடியாக அந் நிலையத்தினை மூடுவதற்குரிய செயற்பாட்டினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- வழிபாட்டு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பொதுமக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிந்ததாக பொலிசார் தெரிவித்தனர். சமூக இடைவெளியுடன் கூடிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்களை பின்பற்ற வைப்பதற்குரிய செயற்பாடுகளை மேற்கொள்ள ஆலய நிருவாகிகளுக்கு அறிவிப்பதற்குரிய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
- அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைய வெளிமாவட்டத்திலிருந்து வரும் நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவேண்டிய தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள போதும் நேரடியாக தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பதினால் அதற்குரிய கண்காணிப்பு செயற்பாடு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற தீர்மானமும் எட்டப்பட்டது.

பின்னராக தற்போதைய சூழ்நிலையில் டெங்கு நோய்த் தொற்று தாக்கம் பற்றியதான கண்காணிப்பு அவசியமானதாக காணப்படுகின்றது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் மக்கள் தங்களது சூழலினை தாங்களே சுத்தமாக வைத்து கொண்டு செயற்பட்டால் நோய்த் தொற்றுக்களிலிருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மக்கள் உரிய வகையில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது தொடர்பான முறைப்பாடு தமக்கு கிடைத்துள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் கருத்து தெரிவித்தார். குப்பைகளை அகற்றுவதற்குரிய செயற்பாட்டினை பிரதேச சபை ஊடாக நாம் மேற் கொண்டு வருகின்ற போதிலும் மக்கள் உரிய வகையில் செயற்பட்டால் மாத்திரமே கழிவுகளை அகற்றும் செயற்பாட்டினை பூரணமாக முன்னெடுக்க முடியும் என கூறினார்.
பராமரிப்பாரற்ற காணிகளிலே அதிகளவான குப்பைகூழங்கள் காணப்படுவதாகவும் அதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுகின்ற காரணத்தினால் அக் காணிப்பகுதிகளினை கட்டாயம் சுத்தப்படுத்தல் வேண்டும் என்பதினால் சிரமதானங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும் இச் சிரமதான பணிக்குரிய ஆயத்தங்களையும் பராமரிப்பாரற்று காணப்படும் காணிகளின் உரிமையாளர்களின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளின் சுத்தத்தினை அவதானித்து சுத்தப்படுத்தல் பணிகளில் ஈடுபடல் வேண்டும் அவ்வாறு தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தாவது காணிகளை சுத்தப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
கிராம உத்தியோகத்தர்கள் தங்களது பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டங்களை மாதாந்தம் நடத்த வேண்டும் அத்தோடு டெங்கு நோய்க்குரிய அபாயங்கள் காணப்படு;ம் இடங்களை அடையாளம் கண்டு அவற்றினை சுத்தம் செய்வதற்குரிய செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென்ற முடிவும் எடுக்கப்பட்டது.
வெற்றிலை தோட்ட செய்கையாளர்களின் தோட்டங்களில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் அவதானிக்கப்பட்டதாக கிராம உத்தியோகத்தர் அறிவித்ததிற்கு அமைய வெற்றிலை தோட்ட செய்கையாளர்களின் தோட்டங்கள் அவதானிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை நாமே முன்னெடுக்க வேண்டும், எமது சுத்தமே எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாக்கும் என்பதினால் எம்மையும் எமது சூழலையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்வோம்.
கணனிமயப்படுத்தப்பட்ட எருவில், மாங்காடு சமுர்த்தி வங்கிகளின் அங்குரார்ப்பன நிகழ்வு - 12.01.2020

சமுர்த்தி பயனாளிகளின் பயன்கருதியும் துரிதமான செயற்பாடுகளினூடாக பயனாளிகளுக்கு துல்லியமான சேவையினை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்திலே சமுர்த்தி வங்கிகள் அனைத்தும் நாடளாவிய ரீதியில் கணனிமயப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் அனைத்தையும் கணனி மயப்படுத்தல் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவருகிறது. மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மாங்காடு, எருவில் சமுர்த்தி வங்கிகள் கணனி மயப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர்.பீ.பீ திலகசிறி மற்றும் மாவட்டச் செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் ஆகியோரினால் சம்பிரதாயபூர்வமாக இன்று (12.01.2021) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி.ஏ.பாக்கியராஜா, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட கணக்காளர் எஸ்.எம்.பஸீர், மாவட்ட தலைமை முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர், எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளரினால் அனைத்து அதிதிகளும் வரவேற்கப்பட்டதோடு 13655 பயனாளிகளை கொண்டு இயங்கும் மாங்காடு சமுர்த்தி வங்கியானது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பகுதியில் அதிகூடிய சமுர்த்தி பயனாளிகளை கொண்டு இயங்கும் சமுர்த்தி வங்கியாகும். சமுர்த்தி வங்கி செயற்பாடானது உத்தியோகத்தர்கள் வினைத்திறனாக செயற்பட்டு பயனாளிகளுக்கு சிறந்ததொரு சேவையினை வழங்கும் முகமாக கணனிமயப்படுத்தப்பட்டமையானது சமுர்த்தி பயனாளிகளுக்கு நன்மைபயக்குமென தாம் நம்புவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் உரையாற்றுகையில் இலங்கையில் எல்லா பாகங்களிலும் சமுர்த்தி வங்கிகளானது கணனி மயப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையிலே வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இச் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சகல சமுர்த்தி பயனாளிகளும் வறுமை எனும் நிலையிலிருந்து மீள வேண்டும் எனும் நோக்குடனே ஜனாதிபதி செயலணி பல்வேறு செயற்றிட்டங்களை சமுர்த்திக்கூடாக முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையிலே கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கூடாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் கருத்து தெரிவித்தார்.

பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர்.பீ.பீ திலகசிறி அவர்கள் மட்டக்களப்பு சமுர்த்தி வேலைத்திட்டங்கள் மீதும் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் மீதும் கொண்டுள்ள அக்கரையினை பாராட்டி சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அடுத்ததாக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வேலைகளை சிறப்பாக வழிநடத்திவரும் அதேவேளை அத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கௌரவிப்பது மதிப்பது மட்டுமல்லாது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் 2000ம் ஆண்டு வங்கி நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவிருந்து இவ் வங்கி வேலைத்திட்டத்தின் அத்திவாரமாக திகழ்ந்து இன்று இப் பிரதேச செயலக சமுர்த்தி வேலைத்திட்டம் சிறந்து விளங்குவதற்கு வித்திட்டமையை பாராட்டி சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களினால் கௌரவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டம் சமுர்த்தி வேலைத்திட்டங்களில் முன்னிலை வகிப்பதற்கு சகல ஆக்கபூர்வமான வேலைகளையும் வழங்கி வருகின்றமையினை பாராட்டி மாவட்ட பணிப்பாளர் திருமதி.ஏ.பாக்கியராஜா அவர்கள் பாராட்டி சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களினால் கௌரவிக்கப்பட்டார்.

பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சமர்த்தி வேலைத்திட்டத்தில் காட்டுகின்ற ஈடுபாடு, அக்கறை, முக்கியத்துவம் என்பவற்றை பாராட்டுவதோடு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் இயங்குகின்ற எருவில், மாங்காடு, கல்லாறு சமுர்த்தி வங்கிகளை கடந்த 2019ம் ஆண்டு அதிகூடிய இலாபத்தினை அடைவதற்கு வழிவகுத்ததோடு அறவிடமுடியாக் கடன்களை இல்லாதொழிப்பதற்கு நேரடி கண்காணிப்பினை மேற்கொண்டு மாவட்டத்திலே தலைசிறந்த வங்கிகளாக செயற்படுவதற்கான ஒழுங்கமைப்பினை மேற்கொள்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கியமையைப் பாராட்டி சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களினால் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் மன்னார் மாவட்ட பணிப்பாளர், தகவல் தொழிநுட்ப செயற்பாட்டாளர் உள்ளிட்ட உத்தியோத்தர்களும் சமுர்த்தி திட்டங்களை வலுப்படுத்தி சமுர்த்தி பயனாளிகளின் பயன் கருதி வழங்கிய சேவைகளையும் பாராட்டி இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

சமுர்த்தி பயனாளிகள் தடங்கலற்ற சேவையினை பெறவேண்டும் என்பது மாத்திரமல்லாது விரைவானதொரு சேவையினையும் பெற்று பொருளாதார ரீதியில் முன்னேற்றகரமானதொரு அடைவினை எட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சமுர்த்தி வங்கிகளானவை கணனிமயப்படுத்தப்படுகின்றமையானது மிகவும் பயன்தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



