2021ம் ஆண்டு அரச புதிய கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்கும் விசேட நிகழ்வு – 2021.01.01
2021ம் ஆண்டு அரச புதிய கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்கும் விசேட நிகழ்வு 01.01.2021ம் திகதி இன்று வெள்ளிக் கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வானது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் உதவி பிரதேச செயலாளர், பொது சுகாதார பரிசோதகர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், மேலதிக மாவட்ட பதிவாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பட்டதாரிப் பயிலுனர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வின் போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்கள், அரச பணியாளர்களுக்கென இருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காரியாலய அரச சேவையாளர்கள் சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.

இரண்டாயிரத்து இருபத்தியோராம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும்
முதலாம் நாளாகிய இன்று, இலங்கை சனநாயக சோசலிச குடியரசு, இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புது வருடமொன்றின் ஆரம்பத்தை கொண்டாடுகின்றது.
இன்றுடன் ஆரம்பிக்கும் புது வருடத்தில்,ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ்,ஐக்கியமாகவும் ஒருமித்த மனதுடனும்,பாதுகாப்பான எமது தாய் நாட்டினுள்,நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை முன்னிறுத்திய,ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கின்ற, பண்பாடுகளை கொண்ட, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவும், நிலைபேறான சுற்றாடல் முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை வழங்கும் பௌதீக வழ அபிவிருத்தியினூடாக மக்கள் மைய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கும் நவீன தொழிநுட்ப அறிவைப் பெற்ற மனித வழங்களை வழிநடத்தும் பரிசுத்தமான அரச நிர்வாகத்தின் ஒரு பங்காளரான நான், மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் ஓர் அரச ஊழியர் என்ற வகையில் அரச கொள்கைகளையும் குறிக்கோள்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு என்னிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை
வினைத்திறனுடன்,
பயனுறுதி வாய்ந்ததாக,
உறுதியான எண்ணத்துடன்,
உச்ச அளவு அற்பணிப்புடன்,
நேர்மையாக,
மக்களுக்கு சார்பாக,
நிறைவேற்றுவதாக சத்தியப்பிரமாணம் செய்கின்றேன்.
என்றவாறு அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்ததோடு தமது புதிய வருடத்திற்கான கடமைப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டனர்.
பிரதேச செயலாளரின் புத்தாண்டு வாழ்த்து அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதோடு கடந்த வருடத்தில் வினைத்திறனான செயற்பாடுகளை எமது உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விதம் பற்றி கூறியதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது. மக்களுக்காக சேவை வழங்கும் வினைத்திறனான சேவையின் அவசியம் இவ் வருடமும் தேவையென்னதால் அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களது பணியினை திறன்பட முன்னெடுக்க வேண்டுமெனவும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் '' சுபீட்சத்தின் நோக்கு '' எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வினைத்திறனாகவும் நேர்மையாகவும் விரைவாகவும் செயற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் தமது கருத்துரையை முன்வைத்தார்.
பின்னர் 2020ம் ஆண்டில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அனைத்து செயற்பாடுகளிலும் வினைத்திறனாக செயற்பட்ட கிளை உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
பின்னடைவான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கிராமிய வீட்டு ஆடு வளர்ப்புத்திட்டம் – 2020.12.31

பின்தள்ளப்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் தாம் வாழும் சூழலில் தமக்கு பொருத்தமான சுயதொழிலை உருவாக்கி தமது வாழ்வாதாரத்தை தாமே வெற்றிகொள்வதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் அற்றவர்களாக காணப்படுகின்றனர்.

பின்தங்கிய அபிவிருத்தியடைவினை எதிர்நோக்கியுள்ள கிராமப்புறங்களில் காணப்படுகின்ற மக்கள் சமூக முறண்பாடுகளிலிருந்து விடுபட்டு உயர் வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கத்துடன் பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, வீட்டுக் கால்நடை அபிவிருத்தி திட்டத்தை வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டுக்கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிற் செய்கை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சின் கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வாழ்வாதாரத்திற்காக சுயதொழிலை எதிர்பார்த்து காத்திருக்கின்ற குடும்பங்களில் எமது பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் 47 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிலைபேறான வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் முகமாக ஆடுவளர்ப்பிற்காக அவர்களுக்கு இன்று (2020.12.31) எமது பிரதேச செயலகத்தில் ஆடுகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வானது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் கால்நடை வைத்திய அதிகாரி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர்களும் பங்குபற்றி பொதுமக்களுக்கான ஆடுகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது பிரதேச செயலாளர் உரையாற்றும்போது மக்கள் தங்களது பொருளாதாரத்தை தாமே உயர்த்திக்கொள்ளும் நோக்கில் செயற்பட வேண்டும் என்றும் COVID 19 சூழ்நிலையிலும் மக்களுக்கான பொருளாதாரத் தேவையினை அவர்களே ஈட்டிக்கொள்ள முயலவைக்கும் நோக்கில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீடு, வேண்டுகோளின் பேரில் இத்திட்டம் எமது எமது மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டது எனவும் கால்நடை வைத்தியர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர்கள் போன்றோர் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் ஆடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அதன் மூலம் பயன் பெறுகின்ற மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டு தங்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்வதோடு அவற்றின் மூலம் இறைச்சி, பால் போன்ற உற்பத்திகளை பெறமுடியும் என்பதோடு தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக ஆடுகளுக்கு குளிர் மூலமாக ஈர்ப்பு வலிகள் அல்லது வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதனால் மிகவும் கண்காணிப்புடன் பயனாளர்கள் ஆடுகளை பராமரிக்க வேண்டும் என்பதோடு நோய்த் தாக்கங்கள் ஏதும் ஆடுகளுக்கு ஏற்பட்டால் உடன் கால்நடை வைத்தியர் அலுவலகத்தை நாடும்படி கால்நடை வைத்திய அதிகாரி அவர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார்.

விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான். கொஞ்சம் சிரமமான தொழில் என்றாலும் செல்வம் கொழிக்கும் தொழில். சொந்த இடம், கால்நடைத் தீவனம் உற்பத்தி செய்ய வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு ஏற்ற தொழில் இது. நன்கு திட்டமிடல், நோய் தடுப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் இலாபகரமான தொழில்தான் ஆடு வளர்ப்பு.
மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது.

ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.
ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும்.
அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்.
ஆட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது.
அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது.
நல்ல எரு கிடைக்கிறது, இதன் மூலம் விவசாயத்தினையும் மேற்கொள்ள முடியும்.
வருடம் முழுவதும் வேலை.
போன்றவை ஆடு வளர்ப்பின் நன்மைகளாக அமைகின்றதெனலாம்.
டெங்கு மற்றும் Covid 19 நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் கலந்துரையாடல் - 2020.12.10

வருமுன் காக்கும் செயற்பாடே சிறந்ததொரு செயற்பாடாகும். கொரோனா தொற்றின் அபாயம் எம்மிடையே காணப்படுகின்ற போதிலும் அதனைப்போன்றதான அபாயம் மிக்க டெங்கு நோய் உருவாக்காத்தையும் பரவலையும் முன்னராகவே தடுப்பதற்கான தேவையும் நமக்குள்ளது.
டெங்கு பரவல் மற்றும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதான கலந்துரையாடலானது இன்று எமது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், உள்ளூராட்சி உதவியாளர், வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

கடந்த 2020.11.27ம் திகதி நடைபெற்ற டெங்கு சம்பந்தமான பிரதேச மட்ட குழுக்கூட்டத்திலே நுளம்பு பரவலை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் பற்றி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்தவகையிலே,
- கிணறுகளில் டெங்கு நோயைப்பரப்பக்கூடிய நுளம்புகளின் பெருக்கம் ஏற்படுவதனை தடுக்கும் முகமாக கிணறுகளை நுளம்பு வலை கொண்டு மூடுவது மற்றும் கிணற்றுக்குள் மீன் போடுவது போன்ற செயற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றமை பற்றியும் அதனை விரைவாக அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் செயற்படுத்தப்பட வேண்டும் என்கின்றதொரு முடிவும் எடுக்கப்பட்டது.
- குப்பைகளை அகற்றுவது தொடர்பான பிரதேச சபையின் செயற்பாடுகள் துரிதமாக இடம்பெறுவதென்பது மிகவும் அவசியமானதொரு செயற்பாடாக முன்வைக்கப்பட்டது.
- பாடசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் சுத்தமான சூழல் என்பதன் அவசியம் பற்றி கூறப்பட்டதோடு இன்றைய நாளில் அச்சூழல் எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றியதான கலந்துரையாடலின்போது சூழலின் தன்மை பற்றிய கண்காணிப்பென்பது நடைபெற வேண்டுமென்பதால் அதற்கானதொரு கண்காணிப்பு குழு அமைக்கப்படுவது தொடர்பானதொரு தீர்மானமும் எடுக்கப்பட்டது.
- பாடசாலையில் டெங்கு ஒழிப்புக்கான சிரமதானமென்பது மிகவும் அவசியமானதொரு செயற்பாடாக காணப்படுவதினால் அச் செயற்பாடு எக்காரணத்தினாலும் நிறுத்திவைக்கப்படலாகாது என்கின்றதொரு முடிவும் எட்டப்பட்டது.
Covid 19 தொற்று தொடர்பான கலந்துரையாடலின்போது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு Covid 19 தொற்று உறுதிசெய்யப்பட்டமை காரணமாக பாரியதொரு அபாய நிலையினை நாம் எதிர் நோக்கியதாக களுவாஞ்சிகுடி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்ததோடு அத் தொற்று நிலையோடு தொடர்பு பட்டவர்களை அடையாளப்படுத்துவதென்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதெனவும் தெரிவித்தார்.

பொது மக்கள் சுயபாதுகாப்பினை மேற் கொண்டு Covid 19 தொற்றிலிருந்து தம்மை தாமே பாதுகாத்துகொள்ள வைப்பதே Covid 19 தொற்றை தடுப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையென சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்ததோடு அவ்வாறான வழிமுறையை பொதுமக்களை பின்பற்ற வைக்க கொள்கை ரீதியானதொரு இறுக்கமான நடைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றதொரு கருத்தினை முன்வைத்தார்.

அந்தவகையில்,
- பொதுமக்கள் முகக்கவசம் அணிவதினை கட்டாயமாக பின்பற்ற வைப்பதை நோக்கமாக கொண்டு அணியாதவர்களுக்கு எதிராக Covid 19 சட்டமூலம் மூலம் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டதோடு அதனை மக்களுக்கு அறிவிக்கவும் முடிவுவெடுக்கப்பட்டது.
- பொதுமக்கள் கூட்டம் கூடுகின்ற நிகழ்வுகளை நடாத்த எத்தணிப்பதை முடிந்தளவு குறைக்க வேண்டுமென்பதோடு அவ்வாறு கூட்டம் கூடவேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் கிராம உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அனுமதி கட்டாயம் பெறப்படல் வேண்டும் என்பதோடு அனுமதியில்லாமல் நடாத்தப்படும் நிகழ்வுகளுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.
- சமுர்த்தி பயனாளிகளுக்கான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பங்களில் சமுர்த்தி நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பயனாளிகளை அனுமதிப்பதோடு சமூக இடைவெளியை பேணும் வகையிலான நடவடிக்கைகள் நடாத்தப்படல் வேண்டும் என்பதோடு சமுர்த்தி நிறுவனங்கள் ஒழுங்கு முறையில் கட்டம் கட்டமாக பயனாளிகளுக்கான சேவையினை வழங்கும் என்பதினால் பொதுமக்கள் சமுர்த்தி நிறுவனங்களின் அறிவிப்பை கேட்டு செயற்படவைக்க வேண்டுமென்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.
- வேறு மாவட்டத்திலிருந்து குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிறுவனங்களுக்கு வருகை தரும் அலுவலர்கள் சமூகமளிப்பதினை முடிந்தளவு குறைப்பதுடன் சமூகமளிக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பான ஏதேனும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வசதி எம்மிடம் உள்ளதனால் அவ்வாறானவர்களின் தகவல்களை உடனடியாக எம்மிடம் வழங்குமாறு பொது சுகாதார பரிசோதகர் கேட்டுக்கொண்டார்.
- வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் குறித்த விடுதியிலிருந்து வேறு விடுதிக்குள் செல்வதினை தடை செய்வதோடு நோயாளி வெளியே சென்று பொருட் கொள்வனவோ, சந்திப்புகளோ மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது.
- தனிமைப்படுத்தலுக்கு உள்ளான குடும்பத்தினர்களின் அவசரமான மற்றும் முக்கியமான தேவைக்கான கொள்வனவினை (மருத்துவ தேவைகள்) நேரடியாக சென்று பெறாமல் விற்பனை பிரதிநிதிகளின் தொடர்பினை பெற்று தேவைகளை நிறைவு செய்வதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நோய் நொடியின்றி இருக்க சுத்தமும் சுகாதாரமும்அவசியம்.
அரசும், சுகாதாரத்துறையும் இணைந்து பல விழிப்புணர்வுகளை மக்கள் முன்பு கொண்டு வந்திருக்கின்றன. இந்த நிலையில் இந்த வைரஸ் வருவதற்கு முன்பு பாதுகாப்பதே சிறந்தது.
நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமாகவே இந்த வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.
- அடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள்.
- கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.
- உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்
- நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
- மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.
- சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
- தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
- நீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.
- லேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.
இதனைப் போன்றே நாம் டெங்கு நோய் தொற்றிலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதும் அவசியமாகும். டெங்கு நோய் பரவும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை அழிப்பதோடு சுத்தமான சுகாதாரமான சூழலையும் நாம் உருவாக்கி நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளுவோம்.
நேத்ரா அலைவரிசையில் இடம்பெறும் “குருகுலம்” கல்வி நிகழ்ச்சி நிரல்..........

இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்கு காரணம் அவன் கற்ற கல்வியே.
கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும்.
எனினும் இன்றைய கால சூழ்நிலையில் Covid 19 தொற்று நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகள் கல்வி கூடங்களாக மாணவர்களின் கற்றலின் மூலமாக காணப்பட்டன எனினும் அவை இன்று மூடப்பட்டுள்ளமையினால் கற்றல் என்பது முற்றாக தடைபட்டுள்ளது எனலாம்.

எனினும் மாணவர்களின் கற்றல் செயற்பாடு தடைப்படக்கூடாது என்பதினை கருத்திற் கொண்டு அரசானது தொலைக்காட்சி ஊடான கல்வி இணையத்தளமூடான கல்வி என மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை நடாத்திச் செல்கின்றது. மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமான வகையில் அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது எனலாம்.
தழிழ், சிங்கள மொழிகளில் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன எனினும் அச் செயற்பாடுகளிலே தமிழ் மாணவர்கள் கலந்துகொள்கின்றார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எமது மாணவர்களுக்கு எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன பாடம் எத்தனையாம் தரத்திற்கு கற்பிக்கப்படுகின்றது என்பதை அறியாமையினாலையே அவர்களால் கற்றலில் பங்குகொள்ள முடியாமல் போகின்றது.
எனவே மாணவர்கள் நேர அட்டவணையினை நன்கு அவதானித்து அதன்படி தொலைக்காட்சியை அவதானித்து கற்றலை மேற்கொள்ள வைக்கும் நோக்கத்தை மையப்படுத்துவதே இப் பதிவாகும். நேர அட்டவணை இங்கே தரப்பட்டுள்ளது இதனை மாணவர்கள் நன்கு அவதானித்து கற்றலை தொடரவேண்டுமென வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.



(S) - சிங்களமொழி நிகழ்ச்சிகள்.
(T) - தமிழ்மொழி நிகழ்ச்சிகள்.
(1st ) - மாதத்தினுடைய 1ம் வாரம்.
(2nd ) - மாதத்தினுடைய 2ம் வாரம்.
(3rd ) - மாதத்தினுடைய 3ம் வாரம்.
(4th ) - மாதத்தினுடைய 4ம் வாரம்.
- திங்கள், புதன், வெள்ளி - சிங்களமொழி மூலமான பாடங்கள்.
- செவ்வாய், வியாழன், சனி - தமிழ்மொழி மூலமான பாடங்கள்.
- ஞாயிறு - சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான பாடங்கள்.
கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம்படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும்.
கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது.
கடற்கரையை அண்டிய சூழலினை சுத்தம் செய்தல் நிகழ்வு – 2020.12.08

மனிதனை சூழ்ந்துள்ள அனைத்தையும் சேர்த்து நாம் சூழல் என்கின்றோம். அதாவது மனிதனது அத்தியவசிய மேலதிக தேவைகள் எல்லாவற்றிகும் இருப்பிடமாக அமைவது சூழலேயாகும். சூழலுக்கும் மனிதனுக்குமிடையிலான தொடர்பு மிகவும் நெருக்கத் தன்மை வாய்ந்ததாக அமைகின்றது. இதனால் சூழலியல் மாற்றங்கள் மனிதனது வாழ்விலும் மனிதனுடைய செயற்பாடுகள் சூழலிலும் செல்வாக்கு செலுத்துவதை தவிர்க்க முடியாதுள்ளது. இன்று உலகெங்கும் சுற்றுச்சூழல் சீர்கேடு பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. உயிரினங்கள் நல்ல நீரையோ, சுத்தமான காற்றையோ, சுகமான வாழ்வையோ நுகர முடியாது அவதியுறுகின்றன.

அந்த அச்சுறுத்தலிலிருந்து சூழலை பாதுகாக்கும் வகையில் இன்று(2020.12.08) சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் கோட்டைக்கல்லாறு பிரதேச கடற்கரை சூழலிலிருந்து ஓந்தாச்சிமடம் வரையான கடற்கரை சூழல் பகுதிகள் யாவும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.



இந் நிகழ்விலே பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம், AMCOR நிறுவனம், நிறுவன ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள், பொது மக்கள் சேவை மையங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கடற்கரை சூழலை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடற்கரையை அண்டியதாக உபயோகப்படுத்தப்படாமல் காணப்படுகின்ற கட்டிட அமைப்புக்களை பயன்படும் வகையிலும் பராமரிப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு அப் பகுதிகள் அனைத்தும் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டன.
இச் சுத்தப்படுத்தல் செயற்பாடானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார வைத்திய பரிசோதகர் கண்காணிப்பின் கீழ் நடாத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நீர் நிலைகளில் மக்கள் போடும் கழிவுப் பொருட்கள், பிளாஸ்திக் பொருட்கள் காரணமாக கழிவு நீர் வழிந்தோட முடியாது தடைப்படுகின்றது. இதனால் நோய்க் காவிகளாக தொழிற்படும் இழையான், நுளம்பு என்பவற்றின் பெருக்கம் வாந்திபேதி, மலேரியா, டெங்கு, நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்களையும் மக்களிற்கு ஏற்படுத்துகின்றது.
ஆகவேதான் இச் சூழல் மாசடைவதை தடுப்பது என்பது இன்று முக்கியமான, அத்தியாவசியமானதொரு நடவடிக்கையாக உள்ளது. இப்பாரிய பொறுப்பு, விளைவை ஏற்படுத்திய மக்களாலேயே கொஞ்சம் கொஞ்சமாக சீர்படுத்தப்பட வேண்டியுள்ளது. அந்தவகையில் சுத்தம் சுகம் தரும் என்பதை சூழலியலிலும் கவனத்திற் கொண்டு அதனை பாதுகாப்பதற்காக குப்பை கூளங்களை கண்ட கண்ட இடங்களில் போடுதலை தவிர்ப்பதோடு அதற்கென உரிய இடங்களில் (குப்பைத்தொட்டியில்) போட வேண்டும்.

அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுதுவதற்கான ஏற்பாடுகளை உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன எனவே மக்கள் சூழலை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.
இயற்கையை நேசிப்போம்! இயன்றதை யாசிப்போம்!



